செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-06-09 10:12 IST   |   Update On 2018-06-09 10:12:00 IST
தென்மேற்கு பருவ மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக பாய்கிறது.
நெல்லை:

தென்மேற்கு பருவ மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக பாய்கிறது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டை மலைப்பகுதியில் உள்ள குண்டாறு அணையில் 57 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. செங் கோட்டை நகர பகுதியில் 33 மில்லி மீட்டர் மழையும், தென்காசியில் 28 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

பாபநாசம், கொடுமுடியாறு அணை பகுதியிலும் அதிக மழை பெய்து வருகிறது. பாபநாசத்தில் 27 மில்லி மீட்டரும், கொடுமுடியாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி தண்ணீர் வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 39.40 அடியாக இருந்தது. இது ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 42 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதனால் அணைக்கு வினாடிக்கு 272 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இன்றைய நீர்மட்டம் 72.80 அடியாக உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று 48.60 அடியாக இருந்தது. இன்று 1 அடி உயர்ந்து 49.50 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 57.50 அடியாக உள்ளது.

குண்டாறு அணை நீர்மட்டம் நேற்று 17.88 அடியாக இருந்தது. ஒரே நாளில் இங்கு 5 அடி உயர்ந்து இன்று 22.38 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 12 அடியாக உள்ளது. இது போல அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 70 அடியாக உள்ளது.

சேர்வலாறு அணையில் கடந்த மார்ச் மாதம் முதல் பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருவதால் அணையில் உள்ள அனைத்து தண்ணீரும் வெளியேற்றப்பட்டு விட்டது. தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பே பழுது பார்க்கும் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 522.43 கன அடி தண்ணீர் செல்கிறது.

ஆனால் அதிகாரிகள் அந்த தண்ணீர் முழுவதையும் ஆற்றில் திறந்து விட்டு விடுகிறார்கள். இதனால் அணையில் தண்ணீர் இல்லாமல் சகதி தண்ணீர் மட்டும் 19.68 அடிக்கு உள்ளது. உடனடியாக சேர்வலாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவை நிறுத்தி அணையில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

நெல்லை, பாளை உள்பட மாவட்டத்தில் பரவலாக இன்று காலையும் சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குண்டாறு    - 57
செங்கோட்டை - 33
கொடுமுடியாறு - 30
தென்காசி    - 28
பாபநாசம்     - 27
அடவிநயினார் - 20
சேர்வலாறு - 19
கடனா அணை - 15
ராமநதி - 15
கருப்பாநதி - 12
ராதாபுரம்    - 11
மணிமுத்தாறு - 9.2
ஆய்க்குடி - 7.2
அம்பை - 4.2
Tags:    

Similar News