செய்திகள்

கருணாநிதியின் சமாதியில் பஜனை பாடிய எ.வ.வேலு

Published On 2018-08-22 15:11 IST   |   Update On 2018-08-22 15:11:00 IST
திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தனது ஆதரவாளர்களுடன் சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் பஜனை பாடி அஞ்சலி செலுத்தினார். #DMK #Karunanidhi #AVVelu
சென்னை:

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதியின் சமாதியை மலர்களால் விதவிதமாக அலங்கரித்தும் வைத்துள்ளனர்.

கருணாநிதியின் மீது அளவற்ற பாசம் கொண்ட கட்சிக்காரர்கள் பலர், தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பஜனை மெட்டில் கருணாநிதியை புகழ்ந்து பாடல்கள் பாடினார். எங்கள் தலைவா தங்கத் தலைவா... அன்பு தலைவா என்று பாடிய பாடல்களுக்கு ஏற்ப இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டன.

இதற்காக ஆர்மோனிய பெட்டி, மிருதங்கம் கஞ்சரா, தாளம், கட்டை போன்ற 50-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளுடன் நிர்வாகிகளை அங்கு அழைத்து வந்திருந்தார்.

நினைவிடத்தை சுற்றி அமர்ந்து கொண்டு இசை இசைக்க எ.வ.வேலு அழகாக கருணாநிதியை புகழ்ந்து பஜனை பாடினார்.

சுமார் 1 மணி நேரம் பாடிய இவரது பாடல்கள் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

இதுபற்றி எ.வ.வேலுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தலைவர் கலைஞருக்கு இசை மீது அதிக நாட்டம் உண்டு. இசையை மிகவும் ரசிப்பார். எனவே இவரது புகழை இசை மூலம் வெளிப்படுத்தி பாடினோம். தலைவரை புகழ்ந்தும் பஜனை பாடினோம்.

வைஷ்ணவ கோவில்களில் நிறைய ஆராதனை, பஜனை பாடல்கள் பாடுவதை பார்த்திருக்கிறேன். அதே போல் தலைவருக்கும் பஜனை பாடல்கள் பாடி எங்கள் அன்பை வெளிப்படுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுமார் 1 மணி நேரம் 10-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் பிச்சாண்டி கிரி, அம்பேத்கர் மற்றும் ஸ்ரீதர் உள்பட ஏராளமானோர் இடம் பெற்றிருந்தனர். #DMK #Karunanidhi #AVVelu

Tags:    

Similar News