கூட்டணி கட்சிகளின் திட்டங்கள், ஓட்டுவங்கியை திருடும் காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு
- டெல்லி சட்டசபை தேர்தலில் 48 இடங்களைப் பிடித்து பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
- இந்த வெற்றியை பா.ஜ.க. பெரிய அளவில் கொண்டாடி வருகிறது.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபைத் தேர்தலில் 48 இடங்களைப் பிடித்த பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை பா.ஜ.க. பெரிய அளவில் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க. தொண்டர்களுடன் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள பிரதமர் மோடி அக்கட்சியின் தலைமை அலுவலகம் சென்றார். அங்கு தொண்டர்களுக்கு மத்தியில் பேசியதாவது:
இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ., ஆட்சிகள் மீண்டும் தேர்வு செய்யப்படுகின்றன. இதற்கு பா.ஜ.க. செய்த வளர்ச்சி பணிகள் மட்டுமே காரணம்.
மோடியின் வாக்குறுதிகள் என்பது வளர்ச்சிக்கானது. நடுத்தர மக்கள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் முடிவு கட்டி வருகிறது. அக்கட்சிகளின் திட்டங்கள் மற்றும் ஓட்டுவங்கியை திருடுகிறது. காங்கிரசுடன் கைகோர்க்கும் கட்சிகளுக்கு முடிவு நெருங்கிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
ஜாதி எனும் விஷத்தை காங்கிரஸ் நாடு முழுதும் பரப்பி வருகிறது.
தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடைவதுடன் மட்டும் அல்லாமல், கூட்டணி கட்சிகளையும் தோற்கடிக்கிறது.
இனிமேலும் காங்கிரசை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. 6 தேர்தல்களில் எதிலும் அக்கட்சி வெற்றி பெறவில்லை. பூஜ்ஜியம் எடுப்பதில் அக்கட்சி ஹாட்ரிக் சாதனை படைத்து உள்ளது. ஊழலுக்கு எதிரானவர்கள் ஊழலில் திளைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.