செய்திகள்
விஷ்ணு- அர்ஜூன்ராஜ்

மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

Published On 2019-10-22 17:58 IST   |   Update On 2019-10-22 17:58:00 IST
கோவையில் மோட்டார் சைக்கிளும்-மொபட்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே உள்ள நல்லேபில்லி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஷ்ணு (வயது 20). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது நண்பர் பத்தேரியை சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் அர்ஜூன்ராஜ் (20). இவர் கோவையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

விஷ்ணுவின் அக்காள்கள் சபிதா (24) சுனிதா என்ற ஆதிரா (22) ஆகியோரும் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்கள். நேற்று சபிதா மற்றும் ஆதிராவுக்கு கல்லூரியில் தேர்வு இருந்தது. பலத்த மழையால் போக்குவரத்து நெருக்கடி மற்றும் பஸ் கிடைக்காததால் உரிய நேரத்துக்கு செல்லமுடியாது. மொபட்டில் செல்ல சகோதரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி தனது தம்பி விஷ்ணுவிடம் தங்களுக்கு பாதுகாப்புக்காக உடன் வரவேண்டும் என்று கேட்டனர். விஷ்ணு தனது நண்பரான அர்ஜூன்ராஜையும் அழைத்தார்.

பலத்த மழைக்கு இடையே சகோதரிகள் மொபட்டிலும், நண்பர்கள் மோட்டார் சைக்கிளிலும் புறப்பட்டனர். வாகனங்கள் கோவை வேளந்தாவளம் அடுத்த கே.ஜி. சாவடி அருகே வந்தபோது அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அவர்கள் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

அந்த வழியே சென்றவர்கள் 4 பேரையும் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு விஷ்ணு, அர்ஜூன்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். படுகாயங்களுடன் 2 மாணவிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News