வாளையார் வனப்பகுதியில் எறும்புதின்னி கடத்த முயன்ற 6 பேர் கும்பல் கைது
கொழிஞ்சாம்பாறை:
பாலக்காடு மாவட்டம் வாளையார் வனப்பகுதியில் 6 பேர் கும்பல் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்தனர். இதனை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை பறக்கும்படை அதிகாரிகள் பார்த்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில் எறும்புத்தின்னி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கோகுல்ராம்(வயது 30), மூர்த்தி(30), பூவரசன்(28), வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சிலம்பரசு(33), பாண்டியன்(35), வினோத்(30) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் இந்த எறும்புத்தின்னியை வாளையார் வனப்பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளனர். இதனை சென்னை கொண்டு சென்று வெளிநாடுகளில் ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த எறும்புத்தின்னியையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 6 பேரையும் பாலக்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.