வெலிங்டன் முகாமில் இருந்து வெளியேறிய பயிற்சி ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
குன்னூர்:
மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சம்பத்குமார்(வயது 20). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ராணுவ தேர்வில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி பெற்று வந்தார்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ராணுவ முகாம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, பயிற்சி பெற்று வந்த இளம் ராணுவ வீரர்கள் முகாமை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனால் வெளியே செல்ல முடியாததாலும், ஊருக்கும் செல்ல முடியாததால் சம்பத்குமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தடையை மீறி முகாமை விட்டு வெளியேறினார். இதனால் அதிர்ச்சியான அதிகாரிகள் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். இதற்கிடையில் நேற்று குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை பிளாக் பிரிட்ஜ் அருகே ஒரு மரத்தில் சம்பத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள், வெலிங்டன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலை கைப்பற்றி குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.