செய்திகள்
டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதை கண்டித்து அப்பகுதி பெண்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு

Published On 2020-07-23 12:47 IST   |   Update On 2020-07-23 12:47:00 IST
கல்பாடியில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதை கண்டித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவல கத்தை முற்றுகையிட்ட, பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதை கண்டித்து, அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று மதியம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள் கல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அதில், கல்பாடி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஏற்கனவே எங்கள் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையால் பல குடும்பங்கள் சீரழிந்து வந்தன. மேலும் பள்ளி மாணவர்களும் மது குடிக்க தொடங்கினர். இதனால் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதனை தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றியதால் தற்போது நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில் மீண்டும் கல்பாடியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதற்காக கிராமத்தில் உள்ள தொட்டியத்தான் அய்யனார் கோவில் அருகே கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடை மீண்டும் திறந்தால் கோவிலுக்கு சென்று வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மது பிரியர்களால் சாதி மோதல் ஏற்படும் நிலை உருவாகும். எனவே கல்பாடி கிராமத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைவிட வேண்டும். இதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும் கல்பாடியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

Similar News