செய்திகள்
தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-23 19:50 IST   |   Update On 2020-07-23 19:50:00 IST
கொரோனா நிவாரண நிதி வழங்க கோரி ஊட்டியில் தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பியிருந்த வியாபாரிகள் உள்பட பலர் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனர். தையல் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

நீலகிரி மாவட்ட தையல் தொழிலாளர் சங்கம் சார்பில், தையல் நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி பிங்கர்போஸ்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாபுட்டி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன், ஊட்டி இடைக்கால குழு தலைவர் யாஸ்மீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தையல் நலவாரியத்தில் 10 மாதமாக வழங்கப்படாத ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

நலவாரியத்தில் பதிவு செய்து 60 வயது பூர்த்தி அடைந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் ஆன்லைன் பதிவை எளிமையாக்கி பதிவு பெற்ற தொழிற்சங்கங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் பெண் தையல் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் ஊட்டி,கோத்தகிரி, எருமாடு உள்ளிட்ட இடங்களில் நடந்தது.

Similar News