செய்திகள்
ஜோதிமணி - கிளாடிஸ் ராணி

காதலிக்கும் போதே கர்ப்பம்: திருமணமான 2 நாளில் கல்லூரி மாணவியை கொன்று உடல் எரிப்பு

Published On 2021-08-08 07:16 IST   |   Update On 2021-08-08 07:16:00 IST
காதலிக்கும் போதே கர்ப்பம் அடைந்த கல்லூரி மாணவி, திருமணம் செய்து வைக்கப்பட்ட 2 நாளில் கொலை செய்யப்பட்டார்.
மதுரை:

கட்டாய தாலி கட்ட வைத்ததால் இந்த வெறிச்செயலை செய்ததாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுரை சோழவந்தான் அருகே உள்ள ராயபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சகாயராஜ். இவருடைய மனைவி செல்வமேரி. இவர்களது மகள் கிளாடிஸ்ராணி (வயது 21). இவர் மதுரை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவரும் அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்த ேசாலைமலை என்பவருடைய மகன் ஜோதிமணியும் (22) காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் இருவரும் ரகசியமாக தனிமையில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் மாணவி கிளாடிஸ்ராணி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி அவர் வீட்டில் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அவரின் தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

விசாரித்த போது, கிளாடிஸ்ராணி தனது காதலன் ஜோதிமணி குறித்து வீட்டில் கூறியுள்ளார். எனவே அவருடைய குடும்பத்தினர், ஜோதிமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி ேகட்டுள்ளனர். ஆனால், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி கிளாடிஸ்ராணியின் உறவினர்கள் அவனியாபுரத்திற்கு வந்து ஜோதிமணியை சோழவந்தானுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு ஜோதிமணிக்கும், கிளாடிஸ்ராணிக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணம் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள கோவிலில் நடந்துள்ளது. அப்போது பெண்ணின் பெற்றோர், உறவினர்கள், போலீசார் இருந்துள்ளனர். ஆனால், ஜோதிமணி தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இந்தநிலையில், 4-ந்தேதி ஜோதிமணி, தனது மனைவி கிளாடிஸ்ராணியை தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என கூறி அவனியாபுரத்திற்கு அழைத்துள்ளார். இதனை நம்பி கிளாடிஸ்ராணியின் பெற்றோரும் அவர்கள் 2 பேரையும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அனுப்பினர்.

இதற்கிடையே, சில மணி நேரம் கழித்து கிளாடிஸ்ராணியின் பெற்றோரை தொடர்பு கொண்ட ஜோதிமணி, "கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற உங்கள் மகள் வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்" என கூறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிளாடிஸ்ராணியின் குடும்பத்தினர், அதுகுறித்து மறுநாள் சோழவந்தான் போலீசில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் ஜோதிமணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பான திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

அவர் போலீசாரிடம் கூறும் போது, “கிளாடிஸ்ராணிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவரின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தந்தை இல்லை. இதனை அவரின் பெற்றோரிடம் எடுத்துக்கூறியும் அவர்கள் அதனை நம்பவில்லை. இதற்கிடையே எனக்கு கட்டாய திருமணமும் செய்துவைத்தனர்.

இதற்ெகல்லாம் கிளாடிஸ்ராணிதான் காரணம். எனவே அவரை பழிவாங்கும் நோக்கத்தோடு அவனியாபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் காட்டுப்பகுதியில் உள்ள முட்புதர் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றேன்.

அங்கு கிளாடிஸ்ராணியின் துப்பட்டாவை பறித்து, அதன் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். மேலம் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து ஊற்றி உடலை எரித்தேன்” என தெரிவித்துள்ளார்.

இதைெதாடர்ந்து ஜோதிமணியை நேற்று மதியம் அவனியாபுரத்தில் அவர் கூறிய காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கிடந்தது. அதனை மீட்ட அவனியாபுரம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து ஜோதிமணியை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News