வள்ளியூர் பஸ் டெப்போவில் டிரைவர், கண்டக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு போக்கு வரத்து பணிமனையில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இங்கு கிளை மேலாளர் போக்கு வரத்து தொழிலாளர்களின் நலன் சார்ந்த எந்தவிதமான கோரிக்கைகளையும் செயல்படுத்துவது இல்லை என்றும், தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவும் கூறி இன்று காலை டிரைவர் மற்றும் நடத்துனர்கள் பணிமனையில் திரண்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதனால் அதிகாலையில் புறப்படவேண்டிய சுமார் 45 பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அவதி அடைந்தனர். இதையடுத்து துணை மேலாளர் பாஸ்கர் மற்றும் சசிகுமார் ஆகியோர் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் மத்திய சங்க தொ.மு.ச. செயலாளர் தர்மன் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பேரில் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
அதிகாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய பஸ்கள் காலை தாமதமாக 6.35 மணிக்கு புறப்பட்டது.