தமிழ்நாடு
தொழிலாளர்களால் அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள் - விபத்தில் பலியான காமோத்ராம்

ஆயில் நிறுவனத்தில் விபத்தில் வாலிபர் இறந்ததால் வன்முறை- தொழிலாளர்கள் தாக்கியதில் 7 போலீசார் காயம்

Published On 2022-04-07 11:03 IST   |   Update On 2022-04-07 11:03:00 IST
ஆயில் நிறுவனத்தில் டேங்கர் லாரி மோதியதில் பலியான காமோத்ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மொடக்குறிச்சி:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்.கே.எம். பூர்ணா ஆயில் மில் இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சுற்றுபுற பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.

பீகார் மாநிலம் ராம்குருவா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணராம். இவரது மகன் காமோத்ராம் (30). இவர் ஆயில் மில்லில் பாய்லர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவி சம்பா தேவி மற்றும் 2 குழந்தைகளுடன் மொடக்குறிச்சி பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் காமோத்ராம் ஆயில் மில்லுக்கு வழக்கம்போல் வேலைக்கு வந்தார். அப்போது ஆயில் லோடு ஏற்றி செல்ல கம்பெனிக்கு வந்த டேங்கர் லாரியில் சிக்கி காமோத்ராம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதையடுத்து விபத்தில் இறந்த காமோத்ராம் உடலை ஆம்புலன்சு மூலம் எடுத்து செல்ல முயன்றனர். இது பற்றி தெரிய வந்ததும் பீகார் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் ஆலையின் முன்பு கூடி விபத்தில் பலியானவருக்கு இழப்பீடு தொகை வழங்கினால் தான் உடலை எடுத்து செல்ல அனுமதிப்போம் என்று தெரிவித்தனர். மேலும் உடலை எடுக்க விடாமல் தடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் 7 போலீசார் விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தற்போது உடலை எடுத்து செல்ல அனுமதிக்கும்படியும் பின்னர் ஆலை நிர்வாகத்திடம் பேசி இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் தொழிலாளர்கள் இழப்பீடு தொகை வழங்கிய பின்புதான் உடலை எடுக்க வேண்டும் என்று கூறினர். சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

நேரம் செல்ல செல்ல தொழிலாளர்களுக்கும், ஆலை நிர்வாகத்துக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் உருட்டுக்கட்டை மற்றும் கற்களை கொண்டு போலீசார் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் மீது தாக்க தொடங்கினர். அவர்களிடமிருந்து தப்பிக்க போலீசார் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் அறைகளில் பதுங்கி கொண்டனர். வடமாநில தொழிலாளர்கள் கம்பெனியின் முன்பகுதியில் இருந்த காவலர் அறையின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களையும் சூறையாடினர்.

இந்த சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதில் இன்ஸ்பெக்டர் தீபா உள்பட 7 போலீசார் காயம் அடைந்தனர். மேலும் தொழிலாளர்கள் அங்கு இருந்த 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் 10-க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இரவு நேரத்தில் வன்முறை வெடித்ததால் அந்த பகுதியே போர்களம் போல காட்சி அளித்தது.

இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு அதிரடிப்படை போலீசாருடன் விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் கம்பெனி வளாகத்துக்குள் நுழைந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். ஆனாலும் போலீசார் வன்முறையில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி மொடக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து ஆலை வளாகத்தில் ஏ.எஸ்.பி. கவுதம் கோயல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜானகிராமன், பாலாஜி ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் டேங்கர் லாரி மோதியதில் பலியான காமோத்ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆலை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்களை அடையாளம் கண்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Similar News