தமிழ்நாடு
திருவள்ளூர் அருகே அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு தரமான முட்டைகள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட அங்கன்வாடி மையங்களில் 500-ம் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தண்ணீர் குளம் வெள்ளக்குளம் பகுதியில் இயங்கும் அங்கன்வாடி மையத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்தஆய்வின் போது அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் வருகை விவரம், குழந்தைகளின் வயதிற்கு ஏற்றவாறு எடை உள்ளதா?, உயரம் சரியாக உள்ளதா? மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகள் உள்ளனரா? என்பது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
மேலும் குழந்தைகளுக்கு தரமான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்க அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு தரமான முட்டைகள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளிடம் கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட இயக்குனர் லதா உள்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.