கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று வாரவிடுமுறை காரணமாக கொடைக்கானல் நகரம் ஸ்தம்பிக்கும் வகையில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்தது. பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறும் சூழல் ஏற்பட்டது. ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளும் வாகன நெரிசலில் சிக்கி தாங்கள் புக்கிங் செய்து வைத்த விடுதிகளுக்கு குறித்த நேரத்தில் செல்லமுடியாமலும், விடுதிகளில் இருந்து கிளம்பியவர்கள் சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல முடியாமலும் சாலைகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
நகரின் முக்கிய இடங்கள் மற்றும் சுற்றுலா இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தங்களை அமைக்க முன் ஏற்பாடு நடவடிக்கைகளை எடுக்காதது, குறைவான எண்ணிக்கையில் போக்குவரத்து போலீசாரை நியமித்தது, வெளியூரிலிருந்து வரும் ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்கு மாற்று இடம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.