விளாத்திகுளத்தில் அண்ணாமலை இன்று நடைபயணம் மேற்கொண்ட காட்சி - எட்டயபுரத்தில் பாரதியார் வீட்டில் உள்ள அவரது சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
தூத்துக்குடியில் 2-வது நாள் நடைபயணம்: அண்ணாமலைக்கு வழிநெடுக பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
- பாரதியார் வீட்டிற்கு சென்று அங்கு உள்ள பாரதியாரின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- விளாத்திகுளம் கமலாபுரம் விலக்கில் இருந்து நடைபயணத்தை அண்ணாமலை தொடங்கினார்.
விளாத்திகுளம்:
தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பாதயாத்திரையை கடந்த 28-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார். அதனை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை தனது நடைபயணத்தை கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து தொடங்கினார்.
கோவில்பட்டி மெயின்ரோடு, கிழக்கு பார்க் ரோடு, மேற்கு பார்க் ரோடு, எட்டயபுரம் ரோடு, புதுரோடு வழியாக பயணியர் விடுதி முன்பு வரையிலும் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்தார். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் அண்ணாமலை பேசினார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக இன்று தனது நடைபயணத்தை விளாத்திகுளத்தில் தொடங்கினார். இதற்காக கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு இன்று காலையில் வந்தபோது எட்டயபுரம் மெயின் ரோட்டில் உள்ள பாரதியாரின் மணிமண்டபத்திற்கு சென்றார்.
பின்னர் பாரதியார் வீட்டிற்கு சென்று அங்கு உள்ள பாரதியாரின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாரதியார் பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டு நூல் கவிதைகளையும் பார்வையிட்டார்.
பின்னர் அங்குள்ள வருகை பதிவேட்டில் அண்ணாமலை கையெழுத்திட்டார். முன்னதாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி எட்டயபுரம் மண்டல் சார்பாக அண்ணாமலைக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் கமலாபுரம் விலக்கில் இருந்து நடைபயணத்தை அண்ணாமலை தொடங்கினார்.
அங்கிருந்து விளாத்திகுளம் ஆற்றுபாலம் வழியாக வந்த நடைபயணம் முக்கிய சாலைகளான மதுரை சாலை, காய்கறி மார்க்கெட் சாலை, மீனாட்சி அம்மன் கோவில் சாலை வழியாக விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் வந்து நிறைவடைகிறது. வழி நெடுகிலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் திரளான பா.ஜனதா கட்சியினரும் ஊர்வலமாக நடந்து வந்தனர். வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து அண்ணாமலை உற்சாகமாக கையசைத்தும், கும்பிட்டவாறும் நடந்து சென்றார். அப்போது கோரிக்கை மனுக்களை புகார் பெட்டியில் அளித்தனர்.