அரசுப் பள்ளி ஆசிரியர் கவுன்சிலிங்: 63,433 பேர் இடமாற்றம் கோரி விண்ணப்பம்
- மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்றது
- மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 952 என 37,358 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை முதல் ஜூன் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.
அதன்படி மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் இதுவரை 63,433 ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்து உள்ளனர்.
தொடக்க கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14,078 பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 7,106, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 4,309, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 822 என 26,075 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளது.
இதே போல் பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 719, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 20,466, முதுநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14,308, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 913, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 952 என 37,358 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
அதன்படி ஒட்டுமொத்தமாக 63,433 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது 90 சதவீத ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை வெகுவாக பாதிக்கும் என ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு முன்பு கலந்தாய்வு நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.