தமிழ்நாடு

கவியருவியில் குளிக்க வனத்துறை இன்று முதல் அனுமதி- சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரிப்பு

Published On 2023-07-12 10:37 IST   |   Update On 2023-07-12 10:37:00 IST
  • பொள்ளாச்சி, வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது.
  • வால்பாறை, பொள்ளாச்சியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது கனமழை குறைந்து உள்ளது.

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் கவியருவி உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பெரிய அளவில் தண்ணீர் வரத்து இல்லை. எனவே கவியருவி வறண்டு காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி முதல் தடை விதித்து இருந்தனர்.

இந்தநிலையில் பொள்ளாச்சி, வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு வேலியையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அங்கு சென்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

இந்தநிலையில் வால்பாறை, பொள்ளாச்சியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது கனமழை குறைந்து உள்ளது. இதனால் கவியருவியில் தண்ணீர் வரத்து ஓரளவு குறைந்து சுற்றுலா பயணிகள் குளிக்க ஏதுவாக உகந்த சூழ்நிலை நிலவுகிறது. எனவே பொள்ளாச்சி கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான வனத்துறையின் தடை இன்று முதல் நீக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இன்று காலை வாகனங்களில் கவியருவிக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் இதமாக விழும் நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளித்து, மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது.

Tags:    

Similar News