தமிழ்நாடு

பொதுக்குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது- ஐகோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பு வாதம்

Published On 2022-06-22 15:49 IST   |   Update On 2022-06-22 18:09:00 IST
  • அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களின் நகல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
  • பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதால் இதை தடுக்கும் நடவடிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.

நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களின் நகல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது. கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு பதில் அளித்தது.

பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக் கோரி ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். பொதுக்குழுவிற்கான நோட்டீஸ் ஜூன் 2ஆம் தேதியே கொடுக்கப்பட்டுள்ளது, இதுவரை பொதுக்குழு, செயற்குழு அஜெண்டாக்கள் வெளியிடப்பட்டது இல்லை, பொதுக்குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று மாலைக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக ஓபிஎஸ் கூறியிருக்கிறார். பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு விசாரணை முடிந்ததும் அவர் தனது முடிவை அறிவிக்க உள்ளார்.

Tags:    

Similar News