தமிழ்நாடு (Tamil Nadu)

146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை- முதலமைச்சர் வழங்கினார்

Published On 2024-07-06 07:10 GMT   |   Update On 2024-07-06 07:10 GMT
  • திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
  • தகுதிவாய்ந்த 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற் நுட்பக்கல்வி, ஐ.டி.ஐ. படித்து வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், மலைப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், துறைச் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று, தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பழங்குடியின வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் 450 நபர்களை திரட்டி திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில் தகுதிவாய்ந்த 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

13.2.2024 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்ட 200 பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

பயிற்சி ஆணைகள் பெற்ற 200 பழங்குடியின இளைஞர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பயிற்சி நிறுவனத்தின் மூலம் மூன்று மாதக்காலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சியின்போது அந்த இளைஞர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் அனைத்தும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டது.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற இளைஞர்களில், 146 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனமான ரானே ஆட்டோ மோடிவ் இந்தியா லிமிடெட் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தலைச் சிறந்த இந்திய நிறுவனங்களின் மூலம் நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களின் கல்வித்திறன் மற்றும் தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் வழங்கி, வாழ்த்தினார்.

பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட 146 இளைஞர்களில், 106 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் ஆவர்.

Tags:    

Similar News