தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது எடுத்த படம்.

கொடைக்கானலில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்

Published On 2024-05-04 08:04 IST   |   Update On 2024-05-04 08:04:00 IST
  • கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்தார்.
  • பெருமாள்மலையில், பழனி மலைப்பாதை பிரிவு பகுதியில் முதலமைச்சர் வந்தபோது, சாலையோரம் பொதுமக்கள் சிலா் நின்று கொண்டு வரவேற்றனர்.

கொடைக்கானல்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானலுக்கு கடந்த 29-ந்தேதி வந்தார். கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவர் தங்கி இருந்தார்.

மறுநாள் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். அத்துடன் கோல்ப் விளையாடினார். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை சந்தித்தார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை 3.40 மணி அளவில் விடுதியில் இருந்து காரில் புறப்பட்டார். வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதை வழியாக அவர் மதுரைக்கு சென்றார். முதலமைச்சர் செல்லும் வழியில் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்று கையசைத்தனர். அப்போது அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி அவர் சென்றார்.

பெருமாள்மலையில், பழனி மலைப்பாதை பிரிவு பகுதியில் முதலமைச்சர் வந்தபோது, சாலையோரம் பொதுமக்கள் சிலா் நின்று கொண்டு வரவேற்றனர்.

அப்போது காரை நிறுத்திய அவர், பொதுமக்களை சந்தித்தார். அவர்களிடம் இருந்து புத்தகங்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர், மதுரை விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

Tags:    

Similar News