முதலமைச்சர் தலைமையில் வரும் 13-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
- முதலமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
- மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல இருக்கும் நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதால், இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
சென்னை:
தமிழக அமைச்சரவையின் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி நடந்தது. அதன்பிறகு பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபையின் மானிய கோரிக்கை விவாத கூட்டம் ஆகியவை தொடர்ந்து நடந்ததால் அமைச்சரவை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.
இந்தநிலையில் வருகிற 13-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். மீண்டும் அவர் அடுத்த மாதம் (செப்டம்பர்) 14-ம் தேதி தான் சென்னை திரும்புகிறார். எனவே தான் இந்த அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த கூட்டத்தில் அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் அங்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தேவையான திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல இருக்கும் நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதால், இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.