தமிழ்நாடு

கவியருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

கவியருவியில் கடும் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு

Published On 2023-07-10 09:55 IST   |   Update On 2023-07-10 09:55:00 IST
  • பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை குறையவில்லை.
  • கவியருவியில் வெள்ளத்தின் வேகமும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது.

வால்பாறை:

கோவை ஆழியாறு அடுத்த வில்லோணி வனப்பகுதியில் கவியருவி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு சோத்துப்பாறை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அருவியாக கொட்டுகிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சோத்துப்பாறை ஆற்றில் பெரியஅளவில் தண்ணீர் வரத்து இல்லை. எனவே கடந்த 6 மாதங்களாக கவியருவி வறண்டு காணப்பட்டது.

கோவையில் தற்போது பொள்ளாச்சி, வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. எனவே கவியருவியில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. எனவே சுற்றுலாப்பயணிகள் திரளாக வந்திருந்து, கவியருவியில் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் கவியருவில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு பாதுகாப்பு கம்பியையும் தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

எனவே வனத்துறையினர் கடந்த 4 நாட்களாக கவியருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதித்து உள்ளனர். பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை குறையவில்லை.

இதற்கிடையே கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலாப்பயணிகள் நேற்று குளிப்பதற்காக கவியருவிக்கு சென்றிருந்தனர். ஆனால் அருவியில் தண்ணீர் வரத்து இயல்பு நிலைக்கு வரவில்லை.

எனவே சுற்றுலாப்பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு வனத்துறையினர் எவரையும் அருவியில் குளிக்க அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு குளிக்க ஆர்வமாக வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

வால்பாறை கவியருவில் குளிப்பதற்காக வனத்துறையின் தடை, 6-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையளவு குறையவில்லை. கவியருவியில் வெள்ளத்தின் வேகமும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது.

எனவே சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கவியருவியில் தண்ணீரின் அளவு குறைந்ததும், அங்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிப்பதற்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News