தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவனை பிரிக்க முடியாது- இளங்கோவன்-முத்தரசன் பேட்டி
- தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் அதே கருத்தை கொண்டவைதான்.
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது பற்றி கேட்கிறீர்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்தது பற்றி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை பொறுத்தவரையில் அவர் மதசார்பின்மை, சாதி ஒழிப்பு, தமிழ் மொழியை காப்பது என்பது போன்ற அடிப்படை கொள்கைகளில் 100 சதவீதம் உறுதியாக இருப்பவர் ஆவார். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் அதே கருத்தை கொண்டவைதான்.
எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை பிரிக்க முடியாது. குறிப்பாக மோடி எதிர்ப்பு விஷயத்திலும் திருமாவளவன் உறுதியாக இருப்பதால் அவர் நிச்சயம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் நீடிப்பார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது பற்றி கேட்கிறீர்கள். அது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயமாகும். இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும். இப்போது அதுபற்றியெல்லாம் பேச வேண்டியது இல்லை.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:
தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த சிலர் விரும்புகிறார்கள். இந்த கூட்டணி உடையாதா? என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களது விருப்பம் நிறைவேறாது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.