ஸ்டாலின் பஸ் என செல்லமாக அழைக்கும் பெண்கள்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.
திமுக சார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்.
நல்லா இருக்கீங்களா? உங்கள் எழுச்சி ஆரவாரம் எனக்கு உற்சாகத்தை தருகிறது. ஏப்ரல் 19-ந் தேதி எப்போது வரும் என நீங்கள் காத்திருக்கிறீர்கள். அதிலும் தாய்மார்கள் முடிவெடுத்துவிட்டால் யார் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது.
முதல்அமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆட்சியின் பயன்கள் பெண்களுக்கு தான் நன்றாக தெரியும். கட்டணம் இல்லாத இலவச பஸ்களை இப்போது பெண்கள் செல்லமாக ஸ்டாலின் பஸ் என சொல்கிறார்கள். ஸ்டாலின் பஸ் வருகிறது என்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை பெற்றோர் மனமுவந்து பாராட்டி தைரியமா வயக்காட்டு வேலைக்கு போறாங்க. அதே போல் 1.65 கோடி பெண்களுக்கும் நிச்சயம் மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என்று சொல்லி நானாவது ஊருக்கு ஊர் செங்கல்லை தூக்கி காட்டுகிறேன். ஆனால் 2019 ஜனவரி 27-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டிய போது மோடியுடன் நின்ற பழனிசாமி ஆட்சி முடிகிற வரைக்கும் அதே மாதிரி தானே பல்லை காட்டி நின்றார்.
புயல் மழை வெள்ளத்துக்கு தமிழகம் வராத பிரதமர் தேர்தல் ஜுரத்தில் இப்போது தமிழகத்தில் வலம் வருகிறார். பா.ஜ.க. ஆட்சியால் அதானி கொடிதான் பறக்குது. இதற்கெல்லாம் ஏப்ரல் 19 தான் பதில் சொல்லும்.
இந்தியா கூட்டணி தான் ஆட்சிக்கு வரப்போகுது.பாஜகவை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.