மின் கட்டண உயர்வு- தேர்தல் வெற்றிக்கு தி.மு.க. அரசு கொடுத்துள்ள பரிசு: ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு
- 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துயரத்துக்கு ஆளாக்கி உள்ளது.
- மக்களை வஞ்சிக்கும் இந்த அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
சென்னை:
மின் கட்டண உயர்வை கண்டித்து த.மா.கா.சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் பேசியதாவது:-
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, பதிவு கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என்று அடுக்கடுக்காக மக்கள் மீது சுமைகளை ஏற்றி வந்தது. இப்போது மீண்டும் 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துயரத்துக்கு ஆளாக்கி உள்ளது.
இது தான் வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு கொடுத்துள்ள பரிசு. மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடப்படும் என்று தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் சொன்ன வாக்கை காப்பாற்றாத அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. மக்களை வஞ்சிக்கும் இந்த அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் விடியல் சேகர், ஜவகர்பாபு, முனவர் பாட்சா, தலைமை நிலைய செயலாளர் ஜி. ஆர். வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் பிஜூ சாக்கோ, பாலா, கோவிந்தசாமி, சைதை மனோகரன், கே.பி.லூயிஸ் மற்றும் போரூர் ஆனந்த்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.