2012-ம் ஆண்டில் நடந்த சம்பவம்: வாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நாகர்கோவில் கோர்ட்
- கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஜிகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- இந்த கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 5 பேர் தவிர 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார், பெரியவிளை, பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகன் விஜிகுமார் (வயது 26).
இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஜிகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக இடலாக்குடி பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற வாழைக்காய் சுரேஷ், பெரியவிளையை சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண் என்ற வருண் குமார் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை ஆனார்கள்.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இன்று பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ், பெரியவிளையைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண்குமார் உட்பட 14 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார். இதில் இடலாக்குடி பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற வாழைக்காய் சுரேஷ், பெரிய விளையைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண் என்ற வருண்குமார் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மீதமுள்ள 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷுக்கு கொலை முயற்சி வழக்குக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழிமறித்து தாக்குதல் குற்றத்திற்காக 5 பேருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனையும், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக 5 பேருக்கும் ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார்.
தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.