தமிழ்நாடு

நிலப்பிரச்சனையில் காருடன் வாலிபர் கடத்தல்- 3 பேர் கைது

Published On 2024-07-05 07:15 GMT   |   Update On 2024-07-05 07:15 GMT
  • நிலம் சம்பந்தப்பட்ட எந்த ஆவணங்களையும் ஹரிபிரசாத்திற்கு, தரணிதரன் கொடுக்கவில்லை.
  • வழக்கில் தொடர்புடைய செந்தில், ஜான்சன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

கோவை:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஆச்சியூரைச் சேர்ந்தவர் மகன் தரணிதரன்(வயது31). இவர்களுக்கு சொந்தமான நிலம் பழனி-தாராபுரம் ரோட்டில் உள்ளது.

இதில் 35 ஏக்கர் நிலத்தை திருப்பூர் மாவட்டம் தாசம்பட்டியை சேர்ந்த ஹரிபிரசாத்(34) என்பவர் வாங்க முடிவு செய்தார். இதற்காக 2.5 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து முதலில் 8.25 லட்சம் ரூபாயை ஹரிபிரசாத், தரணிதரனிடம் கொடுத்தார்.

ஆனால் அதன் பிறகு மீதி பணத்தை கொடுக்கவில்லை. மேலும் இது தொடர்பாக பேச வேண்டும் என ஹரிபிரசாத், தரணிதரனை கோவைக்கு அழைத்துள்ளார்.

அதன்படி தரணிதரன் கோவை வந்து, ரெயில்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வைத்து அவர்கள் சந்தித்தார்.

அப்போது, இந்த இடம் வாங்கும் விஷயத்தில் உங்கள் உறவினர்கள் மூலம் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. ஹரிபிரசாத் அங்கிருந்து சென்றுவிட்டார். அறையில் தரணிதரன் மட்டும் இருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார், தரணிதரன் தங்கியிருந்த அறையில் கஞ்சா வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்த வந்ததாக கூறி சோதனை நடத்தியு ள்ளனர்.

ஆனால் ஒன்றும் சிக்கவில்லை. இதனால் தன்னை மாட்டிவிட ஏதோ சதி நடப்பதாக நினைத்த தரணிதரன் அங்கிருந்து சென்று விட்டார்.

அதன்பிறகு நிலம் சம்பந்தப்பட்ட எந்த ஆவணங்களையும் ஹரிபிரசாத்திற்கு, தரணிதரன் கொடுக்கவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 16-ந் தேதி நிலம் தொடர்பாக பேச வேண்டும் என கூறி மீண்டும் தரணிதரனை கோவைக்கு அழைத்தனர். அவர் காரில் கோவைக்கு வந்து விட்டு, அவர்களை தொடர்பு கொண்டார்.

அப்போது வ.உ.சி.மைதானத்திற்கு வருமாறு ஹரிபிரசாத்தின் நண்பர்கள் அழைத்தனர். அதன்படி தரணிதரனும் அங்கு வந்தார்.

அப்போது அங்கு ஏற்கனவே காத்திருந்த ஹரிபிரசாத்தின் கூட்டாளிகளான பாபு, ஜான்சன் ஆகியோர் காரில் ஏறினர். பின்னர் தரணிதரனை காருடன் கடத்தி சென்றனர்.

அவரிடம் இருந்த பணம் ரூ.30 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு, அவர் வைத்திருந்த ஆவணங்கள் ஆகியவற்றை பறித்து கொண்டு, அவரை பாதி வழியில் இறக்கி விட்டு காருடன் தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து தரணிதரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹரிபிரசாத் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தரணிதரனை கடத்தி பணம், ஆவணங்களை பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஹரிபிரசாத், கார் டிரைவரான சங்கனூரை சேர்ந்த பிரவீன்குமார்(37), சரவணம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் ஊழியரான பாபு(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில், ஜான்சன் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிபிரசாத் தாராபுரம் முன்னாள் பா.ஜ.க மண்டல துணைத்தலைவராகவும், பாபு ரத்தினபுரி முன்னாள் பா.ஜ.க நெசவாளர் அணி மண்டல தலைவராகவும் இருந்துள்ளனர். இதேபோல் பிரவீன்குமார் அனுமன் சேனா அமைப்பின் கோவை வடக்கு மண்டல செயலாளராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News