தமிழ்நாடு

சவரிக்காடு அருகே பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட காட்சி.

வெள்ளத்தில் மிதக்கும் கொடைக்கானல்: அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Published On 2022-09-01 08:36 IST   |   Update On 2022-09-01 08:36:00 IST
  • கொடைக்கானல்-மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
  • பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் சவரிக்காடு அருகே மண்சரிவு ஏற்பட்டது.

கொடைக்கானல்:

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நள்ளிரவு வரை கொட்டித்தீர்த்த மழையால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

கொடைக்கானல் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் அதிக அளவு மழை நேற்று பதிவானது குறிப்பிடத்தக்கது. மழை காரணமாக சவரிக்காடு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் கொடைக்கானல்-மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதேபோல் வத்தலக்குண்டு சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மழை காரணமாக ஏரிச்சாலையில் சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் சாலையோர கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் நகராட்சி நிர்வாகத்தினர் நட்சத்திர ஏரியில் மதகுகளை திறந்துவிட்டு உபரிநீரை வெளியேற்றினர்.

இதன் காரணமாக நேற்று பகல் நேரத்தில் ஏரிச்சாலையில் வெள்ளம் வடிந்தது. ஏரியில் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதேபோல் கொடைக்கானல் நகரில் உள்ள பியர் சோலாஅருவி, பாம்பார் அருவி, தேவதைஅருவி உள்பட பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

இதற்கிடையே வில்பட்டியில் இருந்து நாயுடுபுரம் நோக்கி நேற்று முன்தினம் இரவு வந்த காரின் மீது சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. நேற்று பகலிலும் நகர் பகுதியில் சாரல் மழை பெய்தது.

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் காலை முதலே விட்டுவிட்டு சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இரவு 8 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் நீடித்த இந்த மழையால் பழனியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதற்கிடையே பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் சவரிக்காடு அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் சென்றன.

Tags:    

Similar News