மேட்டூர் அணை நீர்மட்டம் 48.92 அடியாக சரிந்தது
- கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அமைந்துள்ளது.
- அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை கை கொடுக்கவில்லை. இதனால் 3 மாநிலங்களில் உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து குறைந்து போதுமான தண்ணீர் இல்லாத நிலை நீடித்து வருகிறது.
குறிப்பாக கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை முதல் வினாடிக்கு 1,365 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையின் நீர்மட்டம் 100.34 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 180 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே உள்ள கபினி அணைக்கு 1,852 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையின் நீர்மட்டம் 73.80 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த 2 அணைகளில் இருந்தும் நேற்று தமிழகத்திற்கு 9 ஆயிரத்து 279 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று வினாடிக்கு 9 ஆயிரத்து 180 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அமைந்துள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 792 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இந்த நீர்வரத்தானது நேற்று காலை 549 கன அடியாக சரிந்தது.
இன்று காலையில் நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 562 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து போதுமானதாக இல்லாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டு வருகிறது.
நேற்று முன்தினம் 49.70 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 49.97 அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று காலையில் நீர்மட்டம் 48.92 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 17.13 டி.எம்.சி. ஆக உள்ளது.