தமிழ்நாடு

தாளவாடி பகுதியில் இறந்த குட்டியின் உடலுடன் சுற்றி வரும் தாய் குரங்கு.

தாளவாடியில் நெகிழ்ச்சி சம்பவம்- இறந்த குட்டியின் உடலுடன் 5 நாட்களாக சுற்றும் தாய் குரங்கு

Published On 2022-11-15 04:34 GMT   |   Update On 2022-11-15 04:34 GMT
  • உணவு சாப்பிடும் போதும் ஒரு கையில் உணவு சாப்பிட்டு மற்றொரு கையில் குட்டியின் உடலை வைத்து கெட்டியாக பிடித்துக் கொள்கிறது.
  • தொடர்ந்து 5 நாட்களாக குட்டி உடலுடன் தாய் குரங்கு சுற்றி வருகிறது.

ஈரோடு:

தாய்ப்பாசம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பொதுவானது தான் என உணர்த்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. அதேபோன்றுதான் ஈரோடு மாவட்டம் தாளவாடி பஸ் நிலையம் அருகே இறந்த குட்டியின் உடலுடன் தாய் குரங்கு ஒன்று 5 நாட்களாக சுற்றி வருவது பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி பஸ் நிலையம் அருகே கடந்த 11-ந் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி குட்டி குரங்கு ஒன்று இறந்து விட்டது. இதுபற்றி அறியாத தாய் குரங்கு குட்டி குரங்கு உடல் அருகே அமர்ந்தது. மேலும் எங்கு சென்றாலும் இறந்த குட்டி குரங்கின் உடலுடன் செல்கிறது.

அருகில் யாராவது வந்தாலும் உடனடியாக குட்டியின் உடலுடன் மரத்தில் ஏறி அமர்ந்து விடுகிறது. மேலும் தாய் குரங்கு அவ்வப்போது குட்டியின் தலையை தட்டி விடுகிறது. உணவு சாப்பிடும் போதும் ஒரு கையில் உணவு சாப்பிட்டு மற்றொரு கையில் குட்டியின் உடலை வைத்து கெட்டியாக பிடித்துக் கொள்கிறது.

இப்படியாக நாள் முழுவதும் குட்டியின் உடலுடன் சுற்றி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து 5 நாட்களாக குட்டி உடலுடன் தாய் குரங்கு சுற்றி வருகிறது. பொதுமக்களை அருகில் நெருங்க விடுவதில்லை. இதனை பார்க்கும் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தற்போது இறந்த குட்டியின் உடல் அழுக தொடங்கிவிட்டது. வனத்துறையினர் எப்படியாவது இறந்த குட்டியின் உடலை தாய் குரங்கிடமிருந்து மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது.

Tags:    

Similar News