தமிழ்நாடு

ஜிலேபி மீனை தாக்கும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு: பண்ணைகளில் 50 சதவீத மீன்கள் இறப்பு

Published On 2023-10-17 15:01 IST   |   Update On 2023-10-17 15:01:00 IST
  • வைரஸ் தாக்குவதால் பண்ணையில் 30 முதல் 50 சதவீத மீன்கள் வரை இறக்கிறது.
  • முதன்முதலில் 2019-ல் சீனாவிலும், 2021-ல் தாய்லாந்திலும் திலாப்பியா பார்வோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

'ஏழைகளின் மீன்' என்று கருதப்படும் மொசாம்பிக் திலாப்பியா மீன் கடந்த 1950-ம் ஆண்டுகளில் இந்தியாவில் நீர் நிலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தமிழில் ஜிலாபி என்று அழைக்கப்படுகிறது. தண்ணீரில் குறைந்த ஆக்சிஜன் அளவுகளில் உயிர்வாழும் திறன் கொண்ட இந்த மீன், நாடு முழுவதும் பரவியுள்ளது. 1970-ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நைல் திலாப்பியா என்ற ஜிலேபி மீன் கொஞ்சம் பெரியது. இந்த மீன் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு சந்தையில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் பண்ணைகளில் உள்ள குளங்களில் வளர்க்கப்படும் ஜிலாபி மீனை தாக்கி அதிக அளவில் இறப்பு விகிதத்தை ஏற்படுத்தும் திலாப்பியா பார்வோ வைரஸ் இந்தியாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அங்குள்ள பண்ணைகளில் 10 குளங்களில் இருந்து மீன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அப்போது 8 குளங்களில் உள்ள மீன்களில் திலாப்பியா பார்வோ வைரஸ் மீன்களை தாக்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தாக்குவதால் பண்ணையில் 30 முதல் 50 சதவீத மீன்கள் வரை இறக்கிறது.

ஆய்வகத்தில் ஆய்வு செய்தபோது அது 100 சதவீத மீன்களுக்கு இறப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நீர்வாழ் விலங்கு சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்தியாவில், ஆந்திரா மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ஜிலேபி மீன் வளர்க்கப்பட்டு, உள்நாட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது. 2022-ம் ஆண்டில் ஜிலேபி மீன் உற்பத்தி சுமார் 70 ஆயிரம் டன்களாக மதிப்பிடப்பட்டது. இதில் 30 ஆயிரம் டன்கள் மீன்கள் பண்ணைகளில் உள்ள குளங்களில் வளர்க்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக திலாப்பியா பார்வோ வைரஸ் ஜிலேபி மீன்களை தாக்கியுள்ளது.

முதன்முதலில் 2019-ல் சீனாவிலும், 2021-ல் தாய்லாந்திலும் திலாப்பியா பார்வோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 3-வது நாடாக இந்தியாவில் திலாப்பியா பார்வோ வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.

புதிய வைரசால் ஏற்படும் இழப்பை தடுக்க மீன் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அதற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி தொடங்கப்பட வேண்டும். இந்த வைரஸ் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News