காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்தும் ஓ.பன்னீர்செல்வம்
- அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
- ரஜினிகாந்தை ஓ.பி.எஸ். சந்தித்த உடனே, ஊடகங்களில் அவை மிகப்பெரிய செய்தி ஆகி உள்ளன.
காஞ்சிபுரத்தில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது அணியினரும் பயன்படுத்தி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாராளுமன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டோக்களுடன் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஓ.பி.எஸ். அணியினர் அதனை கண்டு கொள்ளாமல் அ.தி.மு.க. பெயரையும் கட்சி கொடியையும் பயன்படுத்தி வருவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரத்தில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது அணியினரும் பயன்படுத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
இதன் பிறகும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருவது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரை சந்தித்து மனு அளித்தனர். அதில் அ.தி.மு.க.வுக்கு தொடர்பில்லாத நபர்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும். அதை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் மனுவை அ.தி.மு.க.வினர் கடந்த 31-ந் தேதி அளித்திருந்தனர். ஆனால் அது தொடர்பாக போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க. கொடிகள் மற்றும் சின்னத்தை காஞ்சிபுரம் முழுவதும் கட்டியுள்ளனர். இது தொடர்பாக ஓ.பி.எஸ். அணியின் துணை ஒருங்கிணைப்பாளரான ஜே.சி.டி.பிரபாகர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் அளித்த பேட்டி வருமாறு:-
ரஜினிகாந்தை ஓ.பி.எஸ். சந்தித்த உடனே, ஊடகங்களில் அவை மிகப்பெரிய செய்தி ஆகி உள்ளன. தமிழகத்தில் ஒரு மாற்றம் வரப்போகிறது, ஒரு ஏற்றம் வரப்போகிறது. நாளை இந்த தமிழகம் எதிர்பார்க்கும் மாற்றமும், ஏற்றமும் அளிக்கும் கூட்டமாக இது அமையும்.
ரஜினிகாந்துடன் நடைபெற்ற சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து ஓ.பி.எஸ். அறிவிப்பார். ஒரு மணி நேரம், தமிழகத்தில் மக்கள் விரும்பும் இரு பெரும் தலைவர்கள் சந்திக்கும் பொழுது, எல்லாவற்றையும் பேசியிருப்பார்கள் அதில் 'அரசியலுக்கு பஞ்சம் இருக்காது' என கருதுகின்றேன்.
டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா கலந்து கொள்வார்களா என்கிற கேள்விக்கு பதில் அளிக்கையில், அவர்கள் மட்டுமல்ல இன்னும் பலரும் கலந்து கொள்வார்கள். இதுதான் உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. தனிக்கட்சி துவங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புரட்சி பயணம் முடியும் பொழுது, மக்கள் யாரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், யார் பக்கம் இந்த கட்சி இருக்கிறது என்பதை இந்த நாடு பார்க்கப்போகிறது.
தி.மு.க.வுக்கு சரியான பதிலடியை, கொடுக்கும் கூட்டமாக நாளை நடைபெற உள்ள கூட்டம் அமையும். தி.மு.க.வுக்கு எதிராக தொடுக்கப்பட்டு உள்ள அம்புகள் எல்லாம் நிச்சயமாக தெரிய வரும். 40 தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் போட்டியிடும். ஓ.பி.எஸ். தொண்டர்களின் தலைவராக நிச்சயமாக அவர் தலைமை ஏற்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.