தமிழ்நாடு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தம்

Published On 2022-12-23 04:40 GMT   |   Update On 2022-12-23 04:40 GMT
  • பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • ரெயில்கள் கடக்கும்போது பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

1914-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த பாலம் நூற்றாண்டை கடந்து சேவை செய்து வருகிறது. தென்னக ரெயில்வேயின் முக்கிய அடையாளமாக உள்ள பாம்பன் ரெயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கர்டர்கள் கடல் காற்று காரணமாக அடிக்கடி துருப்பிடிக்கும்.

இதனை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக பிரத்யேக கலவைகளும் பாலத்தில் பூசப்பட்டு வருகிறது. புயல் மற்றும் கடல்காற்று அதிகமாக வீசப்படும் காலங்களில் பாம்பன் ரெயில் பாலத்தில் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

கடல் காற்று, அலையின் தன்மைகளை கண்டறிய தண்டவாளத்தில் நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கருவி கடல் காற்றின் வேகம், சீற்றம் குறித்து பதிவு செய்யும். அதனை பொருத்து பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

கடந்த ஒரு வாரமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த நவீன கருவி திடீரென பழுதானதால் நேற்று மாலை முதல் ரெயில்களை இயக்க சிக்னல்கள் கிடைக்கவில்லை. இதனால் கடலில் காற்று வீசும் தன்மை, அலையின் தன்மை குறித்த விவரங்கள் தெரியவில்லை.

இந்த தொழில்நுட்ப கோளாறால் ராமேசுவரம்-மதுரை ரெயில் நேற்று ரத்து செய்யப்பட்டது. மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட ரெயில், மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. ராமேசுவரம்-கன்னியாகுமரி ரெயில் மண்டபம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் சென்னையில் இருந்து நேற்று இரவு ராமேசுவரத்திற்கு வந்த ரெயில் இன்று அதிகாலை 4 மணிக்கு மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் பஸ், ஷேர் ஆட்டோக்கள் மூலம் ராமேசுவரம் சென்றனர்.

பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று காலை பாம்பன் வந்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில்கள் கடக்கும்போது பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய முடியாதபட்சத்தில் சென்னை, பெங்களூருவில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Tags:    

Similar News