காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எண்ணிக்கையை 115 ஆக உயர்த்த திட்டம்
- தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.
- மேலிடம் ஒப்புதல் அளித்தால் புதிய மாவட்டங்கள், புதிய மாவட்ட தலைவர்கள், புதிய நிர்வாகிகள் பதவிக்கு பலர் வருவார்கள்.
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். தற்போது 77 மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.
இதை சராசரியாக 2 சட்டமன்றங்களுக்கு ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் குறைந்தபட்சம் 115 மாவட்டங்களாக பிரிக்க முடிவு செய்துள்ளார்கள். இதற்கான திட்டங்களை தயார் செய்து டெல்லி தலைமையின் ஒப்புதலுக்காக அனுப்பி இருக்கிறார்கள். இதுபற்றி டெல்லி மேலிடம் பரிசீலித்து வருகிறது.
தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. அந்த கட்சிகளை பொறுத்தவரை அமைப்பு ரீதியாக வலிமையான கட்சிகள். முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எனவே மாவட்டங்களை அதிக அளவில் பிரித்தாலும் வலிமையான நிர்வாகிகளும் இருப்பதால் நிர்வாகமும் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் காங்கிரசுக்கு அந்த மாதிரியான நிலை இல்லை. மாவட்டங்களை அதிக அளவில் பிரித்தாலும் திராவிட கட்சிகளுக்கு இணையாக எல்லா மாவட்டங்களிலும் நிர்வாகிகள் இருப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதே நேரம் ஏற்கனவே திண்டுக்கல், கன்னியாகுமரி, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 2 தொகுதிகளை கொண்ட மாவட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. எனவே பிரிப்பது தவறில்லை என்ற கருத்தும் உள்ளது. தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது.
எனவே இந்த பிரச்சனை மேலிடத்துக்கு சென்றுள்ளது. மேலிடம் பரிசீலித்து வருகிறது. மேலிடம் ஒப்புதல் அளித்தால் புதிய மாவட்டங்கள், புதிய மாவட்ட தலைவர்கள், புதிய நிர்வாகிகள் பதவிக்கு பலர் வருவார்கள்.
மேலிடத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். அனுமதி கிடைத்ததும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.