ரத்தன் டாடா மறைவு: உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்
- சமூக மேம்பாட்டுக்கான ரத்தன் டாடாவின் அர்ப்பணிப்பு பல தலைமுறைகளை தாண்டி எதிரொலிக்கும்.
- ரத்தன் டாடாவின் வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கானோருக்கு ஊக்கம் தரும்.
சென்னை:
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தேசத்துக்கும் மக்களுக்கும் ரத்தன் டாடாவின் பங்களிப்பு அளவிட முடியாதது.
சமூக மேம்பாட்டுக்கான ரத்தன் டாடாவின் அர்ப்பணிப்பு பல தலைமுறைகளை தாண்டி எதிரொலிக்கும்.
ரத்தன் டாடாவின் வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கானோருக்கு ஊக்கம் தரும்.
இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் டாடா குழுமத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நாட்டை கட்டியெழுப்புவதில் பங்காற்றிய நவீன இந்தியாவின் பொக்கிஷம் ரத்தன் டாடா.
ரத்தன் டாடாவின் உண்மையான செல்வம் பொருளில் இல்லை. அவரது நேர்மை, தேசபக்தி, நெறிமுறையில் உள்ளது. எனது வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்ற முயற்சித்த கதாநாயகன் ரத்தன் டாடா.
ரத்தன் டாடா மறைவால் வாடும் டாடா குழுமம் மற்றும் இந்தியர் ஒவ்வொருவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.