வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைப்பு
- 5 மாவட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயர வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்துக்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இதன் மூலம் 5 மாவட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 3 ஆண்டுகளாக வைகை அணையில் போதிய நீர் இருந்ததால் ஜூன் 2-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தின் முதலே நீர்வரத்து குறைவாக இருந்ததால் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
வைகை அணையில் இருந்து இருபோக பாசனத்துக்காக பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் பாசன வசதி பெறும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மி.கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் என கடந்த 3ம் தேதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் 3 நாட்களிலேயே தண்ணீர் திறப்பு 900 கனஅடியில் இருந்து 750 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மதுரை மாநகர குடிநீரோடு சேர்த்து 819 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 857 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 52.07 அடியாக உள்ளது. பாசனத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதால் மேலூர், கள்ளந்திரி வரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லுமா என விவசாயிகளிடையே கேள்வி எழுந்துள்ளது.
மழை குறைந்துள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுவதும் மதுரை நகருக்கு செல்வதே கேள்விக்குறியாக உள்ளது. எனவே வழக்கம்போல் பாசனத்திற்கு 900 கனஅடி நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.95 அடியாக உள்ளது. அணைக்கு 744 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.03 அடியாக உள்ளது. பெரியாறு 8.4, தேக்கடி 7.3, கூடலூர் 3.4, சண்முகாநதி அணை 2.1 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.