தமிழ்நாடு

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மாபெரும் 'சமபந்தி விருந்து'- விஜய் கட்சி ஏற்பாடு

Published On 2024-05-26 09:00 GMT   |   Update On 2024-05-26 12:15 GMT
  • தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சமபந்தி நடைபெற உள்ளது.
  • தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி பட்டினி இல்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும்.

சென்னை:

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து கட்சி வளர்ச்சி மற்றும் கொள்கைகளை அறிக்கை வாயிலாக வெளியிட்ட விஜய் கட்சி பணிகளோடு மக்கள் நலப்பணிகளிலும் தொண்டர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதையொட்டி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, பென்சில் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வருகின்றனர்.

ஏழை மாணவ-மாணவிகளின் கல்வியை மேம்படுத்த தமிழகம் முழுவதும் தளபதி பயிலகம் என்ற பெயரில் மாலை நேர பயிற்சி வகுப்பும் கட்சி சார்பில் நடந்து வருகிறது.

பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணி மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி ஏழை பொதுமக்களின் பசியை போக்குவதற்காக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மாபெரும் சமபந்தி விருந்து விஜய் உத்தரவுக்கு இணங்க பிரமாண்ட முறையில் நடைபெற இருக்கிறது.

தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சமபந்தி நடைபெற உள்ளது.

சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட இருக்கிறது.

இதுபற்றி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி பட்டினி இல்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி உலக பட்டினி தினமான வருகிற 28-ந்தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழி காட்டும் விதி முறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதைத் தொடர்ந்து சமபந்திக்கான ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். உலக பட்டினி தினத்தையொட்டி கடந்த ஆண்டும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி தஞ்சை, சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் பொதுமக்களுக்கு கட்சி சார்பில் அன்னதானம் நடந்து வருகிறது.

சமபந்தியில் உணவுடன் வடை, பாயாசம், மைசூர் பாக்கு, சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், மோர், அப்பளம், ஊறுகாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் குளம் அருகே நடைபெறும் சமபந்தி விருந்தை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தொடங்கி வைக்கிறார்.

Tags:    

Similar News