தமிழ்நாடு (Tamil Nadu)

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்- பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது

Published On 2024-10-07 16:14 GMT   |   Update On 2024-10-07 16:14 GMT
  • சாம்சங் தொழிலாளர்கள் 25 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
  • சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 25 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட உள்ளிட்ட நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. ஆனாலும் தொடர்ந்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணசேன் ஆகியோர் தலையிட்டு தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு நேற்றும் இன்றும் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் போராட்டக்குழுவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியது

இந்நிலையில், சாம்சங் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உடன்பாட்டால் காஞ்சிபுரம் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் 25 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது

Tags:    

Similar News