அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பாரா ஓ.பி.எஸ்? எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள்
- ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை காலை நடக்கிறது. இதில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதால் இதை தடுக்கும் நடவடிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.
நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கிய நிர்வாகிகளாக வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்பட குறிப்பிட்ட சிலரே ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக உள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று மாலைக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக ஓபிஎஸ் கூறியிருக்கிறார். பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு விசாரணை முடிந்ததும் அவர் தனது முடிவை அறிவிக்க உள்ளார். அவரது அறிவிப்பை எதிர்பார்த்து ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்கள்.