கரூர் அருகே சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை- சட்டவிரோதமாக இயங்கிய குவாரியை மூட போராடியவர்
- க.பரமத்தி குப்பம் பகுதியில் செல்வக்குமார் என்பவர் தனது மனைவி கார்த்திகா பெயரில் ஒரு குவாரியை நடத்தி வந்தார்.
- குப்பத்திலிருந்து காருடையான் பாளையத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகநாதன் லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கரூர்:
கரூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடை தயாரிப்பு, கொசுவலை உற்பத்தி, பஸ் பாடி கட்டும் தொழில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். அதற்கு இணையாக புறநகர் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு சில குவாரிகள் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாகவும், இயங்கி வருவதாக புகார்கள் உள்ளன.
அந்த வகையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் உள்ளிட்டவை உள்ளூர் தேவைகளுக்கு மட்டுமில்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இங்கு க.பரமத்தி குப்பம் பகுதியில் செல்வக்குமார் என்பவர் தனது மனைவி கார்த்திகா பெயரில் ஒரு குவாரியை நடத்தி வந்தார். இந்த கல்குவாரிக்கு அருகாமையில் விவசாயியும், சமூக ஆர்வலருமான ஜெகநாதன் (வயது 52) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக ஜெகநாதனுக்கும், செல்வகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதற்கிடையே கடந்த 2019-ல் ஜெகநாதனை, செல்வகுமார் கொல்ல முயற்சி செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் செல்வகுமாரின் குவாரிக்கான உரிம காலக்கடு சமீபத்தில் முடிந்ததாக தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து செல்வகுமார் அந்த குவாரியை இயக்கி வந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஜெகநாதன் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சட்ட விரோத குவாரி எதிர்ப்பாளர்களுடன் இணைந்து மாவட்ட கலெக்டர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த 9-ந்தேதி கனிம வளத்துறை அதிகாரிகள் செல்வக்குமாருக்கு சொந்தமான குவாரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கிய அந்த குவாரியை மூடி சீல் வைத்து விட்டு சென்றனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் குப்பத்திலிருந்து காருடையான் பாளையத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகநாதன் லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது விபத்தாக இருக்கலாம் என்ற கோணத்தில் க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஜெகநாதன் மீது மோதிய லாரி குவாரி அதிபர் செல்வகுமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது. பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் குவாரியை மூட காரணமாக இருந்த ஜெகநாதனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். பின்னர் அவர் தனது லாரி டிரைவரை ஏவி, ஜெகநாதனை லாரியை ஏற்றி கொலை செய்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து செல்வகுமார் மற்றும் லாரி டிரைவர் சக்திவேல் ஆகிய இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் செல்வக்குமார், சக்திவேல் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அனுமதி இன்றி இயங்கிய குவாரியை மூட புகார் அளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள முதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமர் (60) மற்றும் அவரது மகன் நல்லதம்பி (40) ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். அந்த கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள குளத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.
இந்த குளத்தை மீட்க போராட்டம் நடத்தியதோடு, கோர்ட்டு மூலம் தந்தை, மகன் இருவரும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டனர். அப்போது எதிராளிகள் கடந்த 2019 ஜூலை மாதம் 29-ந்தேதி தந்தை, மகனை கூலிப்படை ஏவி படுகொலை செய்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது சட்டவிரோதமாக இயங்கி குவாரியை மூட போராடிய ஜெகநாதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.