தமிழ்நாடு

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2022-09-11 12:38 IST   |   Update On 2022-09-11 12:38:00 IST
  • ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வி துறையின் நிர்வாக மறு சீரமைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட அரசாணைகள் 101, 108 ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
  • உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் உங்கள் துறை அமைச்சரிடம் முறையிடலாம்.

சென்னை:

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு சென்னை தீவுத்திடலில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன். அரசும், அரசியலும் இரண்டர கலந்தது. இதை யாராலும் பிரிக்க முடியாது. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று 6-வது முறை ஆட்சியை பிடித்தது. இதற்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களுமே காரணம்.

கடந்த ஓராண்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், சலுகைகள், உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்துள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக அனைத்து வகையான தற்காலிக பகுதி நேர பணியில் இருக்கும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது. இந்த பணியாளர்களின் சுய விருப்பத்திற்கேற்ப இணைய வழியான இடமாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 15-ம் தேதி முதல் நடத்தப்படும்.

அதேபோல ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வி துறையின் நிர்வாக மறு சீரமைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட அரசாணைகள் 101, 108 ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. இதன் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தொடக்க கல்விக்கு என்று அலுவலகத்தில் பணியிடம் புதிதாக கிடைக்க பெறுவதுடன் தனியார் பள்ளிகளை நிர்வகிக்க மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளின் நீண்ட நாள் கோரிக்கைப்படி அந்த பள்ளிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதி நிலைமை சீரான பிறகு மேலும் அறிவிப்பு வரும்.

உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் உங்கள் துறை அமைச்சரிடம் முறையிடலாம். அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும். உங்கள் நம்பிக்கைக்கு என்றைக்கும் பாத்திரமாக இருப்பேன். அதில் யாருக்கும் எள் அளவும் சந்தேகம் வேண்டாம். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

மாநாட்டுக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.செல்வம், ப.குமார், இரா.தாஸ், ஜெ.காந்திராஜ், எஸ். சங்கர பெருமாள், வெங்கடேசன், ஆறுமுகம், முத்து சாமி, வின்சென்ட், பால்ராஜ், மகேந்திரன், முத்துராமசாமி, அன்பரசு, மாயவன், மயில், பெருமாள் சாமி, சேகர், பொன்.செல்வராஜ், தியோடர் ராபின்சன், சண்முகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News