அன்னூர் அருகே நீல கவுண்டன்புதூர் தடுப்பணை அருகே கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்த காட்சி.
47 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்: பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி வழிபட்ட கிராம மக்கள்
- நீலகவுண்டன்புதூரில் உள்ள குளத்தின் தடுப்பணையில் மழைநீரானது வழிந்தோடியது.
- செங்கப்பள்ளி வழியாக அவினாசி வட்டம், ராமநாதபுரம் வழியாக அவினாசி தாமரை குளத்திற்கு செல்லும்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது.
மழையால் பல இடங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கி தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கஞ்சப்பள்ளி ஊராட்சியில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவுள்ள எருக்கன்குளம் உள்ளது.
கொட்டி தீர்த்த கனமழையால் இந்த குளம் 47 ஆண்டுகளுக்கு பிறகு முழுவதுமாக நிரம்பியது.
அதனால் நீலகவுண்டன்புதூரில் உள்ள குளத்தின் தடுப்பணையில் மழைநீரானது வழிந்தோடியது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இணைந்து கிடாய் வெட்டி, பொங்கல் வைத்து தடுப்பணைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிந்தோடிய மழைநீரில் வெற்றிலை, பாக்கு, பூ வைத்தும், குளத்தில் உள்ள மழைநீரில் மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்.
வழிந்தோடும் மழைநீரானது தடையில்லாமல் செல்வதற்காக ஊராட்சி நிர்வாகம் அந்த நீர்வழிப்பாதைகளில் உள்ள செடிகளை அகற்றினர். செங்கப்பள்ளி வழியாக அவினாசி வட்டம், ராமநாதபுரம் வழியாக அவினாசி தாமரை குளத்திற்கு செல்லும்.
ஓட்டர்பாளையம் ஊராட்சியில் 65 ஏக்கர் பரப்பளவுள்ள பூலுவபாளையம் குளம் 90 சதவீதம் நிரம்பியுள்ளது.