தமிழ்நாடு

ஆற்றில் வெள்ளப்பெருக்கு- பவானி கூடுதுறையில் புனித நீராட தடை

Published On 2022-08-30 12:24 IST   |   Update On 2022-08-30 12:24:00 IST
  • ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்ந்து வருகிறது.
  • பக்தர்கள் குளிக்கும் பகுதிகளில் படிக்கட்டுகளை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது.

சித்தோடு:

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்ந்து வருகிறது.

இதனால் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் பவானிக்கு வருகிறார்கள். அவர்கள் அங்கு 3 நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை ஆற்றில் குளித்து முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.

மேலும் கர்நாடக, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பலர் குடும்பத்துடன் வந்து ஆற்றில் புனித நீராடி சங்க மேஸ்வரரரை வழிபடுகிறார்கள். இதனால் கூடு துறையில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையொட்டி அணையில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு கூருகிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் படிதுறைகளை தொட்டப்படி தண்ணீர் அதிகளவு செல்கிறது. மேலும் பக்தர்கள் குளிக்கும் பகுதிகளில் படிக்கட்டுகளை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது.

இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்கவோ, திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதனால் கூடுதுறைக்கு பொதுமக்கள் புனித நீராடவும், திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் கூடுதுறைக்கு வர வேண்டாம். மேலும் பக்தர்கள் வழக்கம் போல் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம். பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வழிபாடு செய்ய வேண்டும் என்றனர்.

இதையொட்டி கூடுதுறை ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதை அறியாமல் வந்த சில பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இபோல் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தடுப்பணையில் குளிப்பதற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகிறார்கள்.

இந்த நிலையில் பவானி சாகர் அணையில் இருந்து 6500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதையொட்டி கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் குளிக்கும் இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதையொட்டி கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பவானி ஆற்றில் தண்ணீர் அதிகளவு திறக்கப்படுவதால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, சுற்றி பார்க்கவோ அனுமதி இல்லை. ஆற்றில் தண்ணீர் குறையும் வரை இதே நிலை தான் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு தடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று பொதுமக்கள் பலர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்தனர். தடை விதிக்கப்பட்டு இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

Similar News