தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை- அரசு திட்டவட்டம்
- தமிழகத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை.
- மருந்துகளின் கையிருப்பு குறித்து கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு புகார்கள் கூறப்படுகின்றன.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் மருந்துகள் கையிருப்பு மற்றும் கொள்முதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருந்தகங்களில் அவசிய மருந்துகள், சிறப்பு மருந்துகளின் கையிருப்பு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில், அத்தியாவசிய மருந்துகள் 327 வகைகளும், சிறப்பு மருந்துகள் 301 வகைகளும் கொள்முதல் செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு தேவையான அளவில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை. மருந்துகளின் கையிருப்பு குறித்து கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 32 மருந்து கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ரூ.30 கோடி செலவில் புதிய மருந்து கிடங்குகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் மருந்து கிடங்குகளை கொண்ட ஒரே மாநிலமாக தமிழகம் அமையும். ஆஸ்பத்திரிகளில் எதிர்பாராத வகையில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அவற்றை ஆஸ்பத்திரி நிர்வாகமே கொள்முதல் செய்ய நிதி வசதியும், நிர்வாக அனுமதியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் மருந்துகள் இல்லை என ஊழியர்கள் தெரிவித்தால் உடனடியாக பொதுமக்கள் 104 என்ற உதவி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகள் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
மேலும் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு மத்திய அரசின் சார்பில் மரபணு சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கு சிறப்பு நிலை ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக எழும்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு இந்த சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன் மூலம் ஆஸ்பத்திரியில் மரபணு நோய்களை கண்டுபிடித்தல், சிறப்பு சிகிச்சைகள், மரபணு நோய்களுடன் பிறப்புகளை தடுத்தல் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான மேம்பாட்டு பணிகளும் நடைபெறும். மேலும் மத்திய அரசு சார்பில் ரூ.5 கோடி மேம்பாட்டு நிதியும் மருத்துவமனைக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.