தமிழ்நாடு (Tamil Nadu)

விமான சாகச நிகழ்ச்சி.. போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறும் சென்னை

Published On 2024-10-06 08:17 GMT   |   Update On 2024-10-06 08:17 GMT
  • சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி என்பதால் அதனை கண்டு ரசிக்க பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருந்தது.
  • வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போதிய ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

சென்னை:

இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு 21 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி என்பதால் அதனை கண்டு ரசிக்க பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருந்தது.

விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கோவில் திருவிழாக்களுக்கு செல்வது போன்று கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மெரினா கடற்கரை நோக்கி பொதுமக்கள் குடும்பத்தோடு படையெடுத்தனர். மேலும் பலர் அரசு பேருந்து மற்றும் மின்சார ரெயில்களில் பயணம் மேற்கொண்டனர்.



கடும் வெயிலையும் பொருட்படுத்தாது சிறுவர்கள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவருமே விமான சாகச நிகழ்ச்சியை கைதட்டி ரசித்து மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

இருப்பினும், வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போதிய ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று அரை மணிநேரத்திற்கு ஒரு ரெயில் இயக்கப்படுவதால் வேளச்சேரி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் ரெயிலுக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விமான சாகக நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு மக்கள் வருவதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News