தமிழ்நாடு

காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் நியமனம்

Published On 2023-11-27 07:34 GMT   |   Update On 2023-11-27 07:34 GMT
  • பொறியியல் துறையில் சுமார் 30 ஆண்டுகளாக காமக்கோடி பணியாற்றி வருகிறார்.
  • காமக்கோடிக்கு பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சின்னாளபட்டி:

திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காலியாகவே உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித்சிங் காந்தி கிராம பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தராக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனரும், பேராசிரியருமான காமக்கோடி காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

சென்னை ஐ.ஐ.டி.யில் கணினி அறிவியல், பொறியியல் துறையில் சுமார் 30 ஆண்டுகளாக காமக்கோடி பணியாற்றி வருகிறார். அப்துல்கலாம் டெக்னாலஜி இன்னோவேஷன் நேஷனல் பெலோஷிப், ஐ.இ.எஸ்.ஏ. டெக்னாலஜி தொலைநோக்கு விருது, ஐ.பி.எம். நல்லாசிரியர் விருது, டி.ஆர்.டி.ஓ. அகாடமி சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு மதிப்புமிக்க விருதுகளை பெற்றவர்.

மேலும் அசோஷியேசன் ஆப் கம்ப்யூட்டிங் அண்டு கம்யூனிகேசன் சொசைட்டி வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். துணைவேந்தராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ள காமக்கோடிக்கு பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News