தமிழ்நாடு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.19 கோடியில் திருப்பணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2023-06-28 14:24 IST   |   Update On 2023-06-28 14:24:00 IST
  • இறை அன்பர்களுக்கு தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும்.
  • கடைசியாக கோவிலுக்கு 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.19 கோடி செலவில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் தொடக்க விழா நடை பெற்றது. இதையொட்டி ராஜகோபுரம், ராஜகோபுரம் விநாயகர், ராஜகோபுரம் ஆறுமுகர், பல்லவ கோபுரம், விகட சக்கர விநாயகர், பல்லவர் கோபுர ஆறுமுகர், தம்பட்டை விநாயகர் ஆகிய சன்னதிகளில் திருப்பணிகள் செய்ய பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பாலாலய பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுவரை இந்து அற நிலைத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருப்பணிகள், திரு விழாக்கள், கும்பாபிஷேகம் என 788 விழாக்கள் சிறப்பாக நடைபெற்று உள்ளது. மேலும் 5001 ஏக்கர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4740 கோடி ஆகும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் சட்டப்படி பக்தர்களின் சுதந்திரமான இறைவழி பாட்டிற்கு அனைத்து உதவிகளையும் இந்து சமய அறநிலைத்துறையும், தமிழ்நாடு அரசும் செய்யும். இதில் யார் பெரியவர் என்ற பிரச்சினை இல்லை. இறை அன்பர்களுக்கு தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும்.

ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிகள் 2024 -ம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெற வேண்டும் என்று துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். கடைசியாக கோவிலுக்கு 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது. சுமார் 17 ஆண்டுகள் கடந்துவிட்டதால் திருப்பணிகளை வேகப்படுத்தி குடமுழுக்கு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News