பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி மணிக்கு ஒருமுறை கவிபாடும் மணிக்கூண்டு
- சமீபத்தில் பாரதியார் உயராய்வு மையம் கட்டிடம் பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது.
- மணிக்கூண்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பாரதியாரின் பாடல்களை ஒலியாக எழுப்பும்.
வடவள்ளி:
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழத்துறை காணி நிலம் பாரதியார் உயராய்வு மையம் மற்றும் பாரதி பாசறை அறக்கட்டளை சார்பில் கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முகப்பு பகுதியில் 21 அடி உயரத்தில் கவிக்குரல் மணிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு பல்வேறு ஆராய்ச்சி, திட்டபணிகள் காணிநிலம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பாரதியார் உயராய்வு மையம் கட்டிடம் பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது. தொடர்ந்து பாரதியார் கவிக்குரல் மணிக்கூண்டு இன்று மாலை திறக்கப்பட உள்ளது.
இந்த மணிக்கூண்டு அமைப்பதற்கான கட்டுமான பணி கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து இன்று முதல் மணிக்கூண்டு பயன்பாட்டிற்கு வர உள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்த்துறை தலைவர் சித்ரா கூறியதாவது:-
மணிக்கூண்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பாரதியாரின் பாடல்களை ஒலியாக எழுப்பும். பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி இது கட்டப்பட் டுள்ளது.
சுற்றுவட்டார பகுதிகளில் பாரதியார் பற்றி படிக்கவும், பாரதியார் கவிதைகளை வாசிப்பதற்கான வசதிகளை பாரதியார் உயராய்வு மையம் வாயிலாக திறப்பு விழாவிற்கு பிறகு ஏற்படுத்தப்படும்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாரதியாரின் பெருமைக்கு ஒர் அடையாளத்தை உருவாக்கியதில் பெருமிதம் கொள்கிறோம். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகமும் ஒப்புதல் அளித்து ஊக்குவித்தது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள மணிக்கூண்டு ரூ.30 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.