null
பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாது- குஷ்பு கடிதம்
- பாஜக சார்பில் குஷ்பு பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
- பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு, குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கடந்த சில தினங்களாக பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட விபத்தில் எனக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த 5 ஆண்டுகளாக என்னை கஷ்டப்படுத்துகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. பிரசாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் என்னால் முடிந்தவரை பிரசாரம் செய்தேன். எதிர்பார்த்தபடியே உடல் நிலை மோசமாகி உள்ளது.
நீண்டநேரம் நிற்கவும், உட்காரவும் சிரமமாக உள்ளது. எனவே எனது பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனது சமூக வலை தளங்கள் மூலம் பா.ஜனதாவின் கொள்கைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வேன்.
நமது பிரதமர் தொடர்ந்து 3-வது முறையாக பதவி ஏற்பதை நான் எங்கிருந்தாலும் உரத்த குரலில் ஆரவாரம் செய்வதையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பு நாளை மும்பை செல்கிறார். அங்கு டாக்டர்கள் சொல்லும் ஆலோசனையை பொறுத்து லண்டன் சென்று சிகிச்சை பெற உள்ளதாக கூறினார்.