மதுரை விமான நிலையத்தில் வி.ஐ.பி. பாதை மூடல்- பயணிகள் தவிப்பு
- மதுரை விமான நிலையம் தென் தமிழகத்தில் மிக முக்கியமான விமான நிலையமாக திகழ்ந்து வருகிறது.
- விமான நிலையம் வரும் பயணிகள் வி.ஐ.பி.களுக்காக கூடி இருக்கும் கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளே செல்ல தாமதம் ஏற்படுகிறது.
அவனியாபுரம்:
மதுரை விமான நிலையம் தென் தமிழகத்தில் மிக முக்கியமான விமான நிலையமாக திகழ்ந்து வருகிறது. இந்த விமான நிலையத்தில் தினமும் 15-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு விமானங்கள் வந்து செல்கிறது.
இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். தென் தமிழகத்திற்கு வரக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் முதல்வர் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை அதிகமானோர் மதுரை விமான நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் அடிக்கடி விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்து, மதுரை அருகே உள்ள இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் வி.ஐ.பி.க்கு என தனி பாதை இருந்தும் அதனை பயன்படுத்தாமல் பயணிகள் செல்லும் பொது வழியிலேயே செல்வதால் தலைவர்களின் வருகைக்காக காத்திருக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் அதிமாக இருக்கிறது.
இந்த கூட்ட நெரிசலால் பயணிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையம் வரும் பயணிகள் வி.ஐ.பி.களுக்காக கூடி இருக்கும் கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளே செல்ல தாமதம் ஏற்படுகிறது.
மதுரை விமான நிலையத்தில் விஐபிகள் செல்வதற்கான தனிப்பாதைகளை பயன்படுத்தினால் விமான பயணிகள் வந்து செல்வதில் உள்ள சிரமம் குறையும் என்பது பயணிகளின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
மதுரை விமான நிலையத்தில் ஏற்கனவே மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குறைவாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனி பாதை திறந்தால் அதற்கு தனியாக வீரர்கள் நியமிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் வி.ஐ.பி. பாதை மூடப்பட்டுள்ளதா? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கேள்வி விடுத்துள்ளனர்.
பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு வி.ஐ.பி. பாதையை உடனடியாக திறந்து விட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.