தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2024-07-01 04:00 GMT   |   Update On 2024-07-01 04:00 GMT
  • கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விரைவில் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

சேலம்:

கர்நாடகா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

மாநிலம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை, கபினி அணை, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 369 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இதே போல் 84 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டம் 77 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 560 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விரைவில் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று தமிழக எல்லையான பிலிக்குண்டுவுக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலையும் அதே அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று மதியம் முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 39.74 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1038 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 11.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News